கோமுகி அணை நீர்மட்டம் 37 அடியாக உயர்வு

சின்னசேலம், அக். 9: கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 37 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமில்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின்மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியார் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து உள்ளது.

அதைப்போல கல்வராயன்மலையில் இருந்து கோமுகி அணைக்கு நீர்வரத்து இருக்கும் கல்பொடை, பொட்டியம் ஆறுகளில்  இருந்தும் கடந்த வாரம் 275 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதனால் அப்போது  கோமுகி அணையின் நீர்மட்டம் 30.3 அடியாக உயர்ந்தது. இதைப்போல கடந்த இரு வார காலமாக கல்வராயன்மலை ஆறுகளில் இருந்து சராசரியாக 100 கனஅடி நீர்வரத்து இருப்பதால் தற்போது கோமுகி அணையின் நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிருமுறை  கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வந்தால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த மாதம்வரை வறண்டு கிடந்த கோமுகி அணையில் தற்போது 37 அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளதை எண்ணி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் அணை நிரம்ப 8 அடி நீர் தேவை என்பதாலும், மழை பெய்து வருவதால் அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Gomukhi Dam ,
× RELATED கோமுகி அணை நீர்மட்டம் 42.5 அடியாக உயர்வு:...