×

பண்ருட்டி நகராட்சி பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள்

பண்ருட்டி, அக். 9: பண்ருட்டி நகராட்சி பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு பகுதியில் மணிநகர், ராஜேஸ்வரி நகர், அருள்ஜோதி நகர் உள்ளிட்ட ஏராளமான நகர் பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ராஜேஸ்வரி நகரில் முந்திரி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் சிறு சிறு கரி துகள்கள், சாம்பல்கள் வெளியேறி அருகிலுள்ள வீடுகளின் மேல் படுகிறது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீரும் பாதித்து குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் மனு வழங்கினர். மனுவை பெற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இம்மனுவின் மீது உரிய விசாரணை செய்து ஆய்வறிக்கை அனுப்ப ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் ஆரோக்கியசாமி, மேற்பார்வையாளர் பொறுப்பு குமாரகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் முதல்கட்ட தகவல்படி தொழிற்சாலை நடத்த எவ்வித உரிமமும் பெறாதது தெரிய வந்தது. அருகில் உள்ள வீடுகளில் சென்று பார்த்தபோது ஏராளமான சாம்பல், கரி துகள்கள் விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட முந்திரி நிர்வாகியிடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏன் நிறுவனம் நடத்துகிறீர் என கேட்டபோது சரியான பதில் இல்லை. இதனையடுத்து பொது சுகாதார சட்டப்படி 1930ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொழிற்சாலைகளை நகராட்சி சட்டத்திற்கு உட்பட்டு உரிமம் பெற்று நடத்த வேண்டும், பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும். இடையூறு ஏற்படாதவகையில் கழிவுநீர் சுகாதார முறைப்படி வெளியேற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. விரைவில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்ற வேண்டும் என எச்சரித்தனர். இந்த சூழ்நிலையில் பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதியில் நகராட்சி உரிமம் பெறாமல் சுகாதார பாதிப்புகளுடன் ஊறுகாய் கம்பெனிகள், பேக்கரிகள், தோல் மண்டிகள், இறைச்சி கடைகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Companies ,Panruti Municipality ,
× RELATED மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி...