×

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் சாலை பணிக்காக அனுமதி பெறாத இடங்களை அபகரிக்க முயற்சி

சேத்தியாத்தோப்பு, அக். 9:சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் விகேடி நெடுஞ்சாலை பணிக்காக அனுமதி பெறாத இடங்களையும் அபகரிக்க உள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம். இக்கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், பொதுமக்களும் வசித்து வருகின்றனர். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது குமாரக்குடி கடைவீதி. இதனருகே குடியிருப்புகளும் உள்ளது. விகேடி சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே இடங்கள் அளவீடு செய்யப்பட்டு இடையூறாக இருந்த வீடுகள், திருமண மண்டப கட்டிடங்கள் சென்ற மாதம் அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை பாதுகாப்போடு இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. அதன் பின்பு சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திடீரென எந்தவித முன் அனுமதி பெறாமல் குமாரக்குடி மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கடை கட்டிடங்களையும், குடியிருப்புகளையும், இடித்து அகற்ற நகாய் திட்ட நெடுஞ்சாலை பணியாௗர்கள் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் அனைவரும் திரும்பி சென்றனர். வலசக்காடு, கானூர், கூடலையாத்தூர், காவாலக்குடி, மழவராயநல்லூர், முடிகண்டநல்லூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அத்தியாவசிய பொருள்களை வாங்கி செல்ல குமாரக்குடி கிராமத்திற்குத்தான் வர வேண்டும். மேலும் 15க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் இதனை நம்பி தான் உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நகாய் திட்ட அதிகாரிகள் எங்கள் வாழ்க்கையை நசுக்கும் செயலாக சாலையின் நடுவே நடப்பட்டுள்ள மின் கம்பங்களை அகற்றி எல்லையை மீறி முன் அனுமதி பெறாமல் எங்கள் இடங்களில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு உயர்மின் கோபுர கம்பங்களை நட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். எனவே எங்கள் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்கள், குடியிருப்புகள் பாதிக்காத வண்ணம் மின் கம்பி பாதைகளை சாலையின் மேற்கு பகுதி வழியாக கொண்டு சென்றால் யாருக்கும் பாதிப்பு வராது. இதனை மீறி நகாய் திட்ட அதிகாரிகள் செயல்பட்டால் விரைவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் கோட்டமின் செயற்பொறியாளர் ஜெயந்தியிடமும், தமிழக முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kumarakudy village ,Sethiyattop ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்