×

திருவட்டார் அருகே ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகை, பணம் திருட்டு.

குலசேகரம், அக். 9 : திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் தைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சிசில்(38).இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவருக்கு அஜிதா(35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். வீட்டில் அஜிதாவும்,2 குழந்தைகளும் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் கடந்த 5ம்தேதி முதல் தொடர் விடுமுறை என்பதால் அஜிதா தனது வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் வெள்ளிவிளாகம் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் படுக்கை அறை சாவியை காணவில்லை. இதனால் கதவை திறக்க முடியாததால் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வேறு சாவி மூலம் கதவை திறந்துள்ளனர். அப்போது பீரோ திறந்து கிடந்தது. உள்ளே இருந்த 35 பவுன் நகை, சுய உதவி குழுவில் இருந்து வாங்கி வைத்து இருந்த ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை வீடு முழுவதும் வீசி சென்று இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அஜிதா திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தக்கலை ஏஎஸ்பி  விஜித் சாஸ்திரி சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். மேலும் திருவட்டார் போலீசார், தனிப்படை போலீசாரும்  சம்பவ இடம் வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. திருவட்டார் சுற்று வட்டார பகுதிகளில் கடைகள், வீடுகளை உடைத்து அடிக்கடி திருட்டு நடந்து வருகிறது. இதுவரை குற்றவாளிகளை பிடிக்காததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருவட்டாரை அடுத்துள்ள மலவிளை பகுதியில் இதே ேபால் ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. தற்போது மாத்தூர் பகுதியில்  நடந்துள்ளது. திருவட்டார் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அடிக்கடி  விடுமுறையில் செல்வதால் ரோந்து பணி, வழக்கு விசாரணை போன்றவற்றில் ெதாய்வு ஏற்பட்டுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரோந்து பணிகளை துரிதப்படுத்தி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை  கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvattar ,army house ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்