×

விருதுநகரில் விஜயதசமி விழாவையொட்டி புலி வேடமிட்டு, சிலம்பமாடி ஊர்வலமாக வந்த இளைஞர்கள்

விருதுநகர், அக். 9: விருதுநகரில் சமுதாய அமைப்புகள் சார்பில், வீரத்தின் திருவிழாவாக, விஜயதசமி விழா நடைபெற்றது. இதில் இளைஞர்கள் புலிவேடமிட்டு, சிலம்பமாடி ஊர்வலமாக வந்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விஜயதசமி திருவிழா நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அனைத்து கோயில்கள், நூற்றுக்கணக்கான வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.                 

விழாவின் முக்கிய நாளான நேற்று காலை சிவன் கோயிலில் உள்ள சொக்காநாதர் சந்திரசேகரர் அவதாரத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் நகர்வலம் வந்தார். பின், மதுரை ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வன்னி வனத்தில் எழுந்தருளினார். அங்கு அம்புகளை விட்டு மகிஷா சூரசம்ஹாரம் செய்தார். சொக்கநாதர் எழுந்தருளி நகர்வலம் வந்தபோது, மூன்று சமுதாயத்தினர் சார்பில் இளைஞர்கள் புலிவேடமிட்டு, அந்தந்த சமூக மக்கள் கூட்டத்தின் முன்பாக புலியாட்டம் ஆடிச் சென்றனர். இவர்களின் முன்பாக இளைஞர்கள் சிலம்பம் சுற்றிச் சென்றனர்.  

மாலையில் விருதுநகர் முருகன் கோயிலில் உள்ள சொக்கநாதர் எழுந்தருளி நகர்வலம் வந்து, மதுரை ரோடு பிள்ளையார் கோயில் நந்தவனத்தில் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின்போது ஒரே சமுகத்தின் சார்பில் நகரின் 6 பகுதிகளில் இருந்து புலிவேடமிட்ட நபர்கள், ஆடிச் செல்ல இளைஞர்கள் சிலம்பம் சுற்றிச் சென்றனர். மாலை 4 மணி முதல், நகரின் அனைத்து பகுதி மக்களும் குடும்பம், குடும்பமாக மதுரை ரோட்டில் விநாயகர் கோயிலில் வீற்றிருந்த சொக்கநாதரை வழிபட்டனர். அங்குள்ள பள்ளி மைதானத்தில் குடும்பத்தோடு அமர்ந்து சுண்டல், பொரி சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த மக்கள் வெள்ளத்தில் ஆங்காங்கே பெண் பார்க்கும் படலமும் நடைபெற்றது. இதையொட்டி நகரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : procession ,festival ,Virudhunagar ,Vijayadasamy ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...