×

சமூக விரோதிகளின் பிடியில் வைகை அணை விடுதிகள்

தேனி, அக். 9: பகல் நேரத்தில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வைகை அணை, இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு என சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக வைகை அணை விளங்குகிறது. தினமும் இங்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வைகை அணையில் அரசு பயணியர் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் வி.வி.ஐ.பி.,க்கள் தங்கும் விடுதிகள் மட்டும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. மற்ற சாதாரண விடுதிகள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

தவிர இங்குள்ள பொதுப்பணித்துறை ஊழியர்களின் குடும்பத்தினர் தங்க கட்டப்பட்ட பல குடியிருப்புகளும் காலியாக கிடக்கின்றன. இவற்றை இரவில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால் இரவு 7 மணிக்கு மேல் இப்பகுதி கிராம மக்களே நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பு காலை 6 மணி வரை நீடிக்கிறது. இது பற்றி தெரிந்தும் இங்குள்ள பணியாளர்களோ, போலீசாரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இங்கு வந்து செல்லும் சமூக விரோதிகளால் சுற்றுக்கிராம மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags : Vaigai ,dam hotels ,clutches ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...