×

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் 30 கிராமங்களில் முளைப்பாரி விழா

சாயல்குடி, அக்.9: முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா மற்றும் முளைப்பாரி திருவிழா நடந்தது. பாதுகாப்பு பணியில் வெளிமாவட்ட போலீசார் ஈடுபட்டனர். சாயல்குடி அருகே மேலக்கிடாரம் திருவடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா, உய்யவந்தம்மன் பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா நடந்தது. டி.மாரியூர், கிருஷ்ணாபுரம் உச்சிமகாளியம்மன், கடுகுசந்தை சத்திரம் அழகுவள்ளியம்மன், கடலாடி அருகே கருங்குளம் உய்வந்தம்மன், மாரந்தை அரியநாயகி அம்மன், முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை முத்துமாரியம்மன், செல்வநாயகபுரம் செல்லியம்மன், மொச்சிக்குளம் அரியநாயகி அம்மன், கொல்லங்குளம் அம்மன், கீரனூர் அரியநாயகிஅம்மன், சித்திரங்குடி உலகநாயகி அம்மன், கதையன் பத்திரகாளியம்மன், பருக்கைகுடி வாழவந்தம்மன், வெண்ணீர் வாய்க்கல் வாழவந்தம்மன், ஓரிவயல் அம்மன், பூக்குளம் தம்பிராட்டி அம்மன், மகிண்டி முத்துமாரியம்மன், பொதுக்குடி அம்மன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் புரட்டாசி மாத பொங்கல், பால்குடம் மற்றும் முளைப்பாரி திருவிழா 10 தினங்களாக நடந்து வருகிறது.

விழாவில் மூலவரான அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பக்தர்கள், அக்னிசட்டி, வேல், பால்குடம் எடுத்தனர், சில ஊர்களில் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்து விட்டு, ஊரணியில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்தூர் காவல் சரகத்தில் ஒரே வாரத்தில் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் சாமி கும்பிடுதல், முளைப்பாரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. போலீசார் பற்றாக்குறை இருப்பதால், வெளிமாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : festival ,Mudukulathur ,villages ,Sayalgudi ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...