விரைவாக போனஸ் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

திருப்பூர், அக்.9:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் போனஸ் வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிட்டிங், டையிங், வாசிங், காம்பேக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி,எலாஸ்டிக், காஜா-பட்டன் உட்பட  பல்வேறு வகையான  ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில், தமிழகம் மற்றும் வெளிமாநில தொழிலாளர் மொத்தம் 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.  தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி வருவதால் பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்கள்  விரைவில் போனஸ் வழங்க உள்ளனர். கடந்த ஆண்டைவிட கூடுதல் போனஸ் வழங்கவேண்டும் என, தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நிதி நிலைக்கு ஏற்ப, நிறுவனங்கள் போனஸ் வழங்க, தொழில் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன. பண்டிகை நெருங்கும் நிலையில், பின்னலாடை நிறுவனங்கள், போனஸ் பட்டுவாடாவுக்கு தயாராகி வருகின்றன. தொழில் நிறுவனங்கள் பல்வேறு வகைகளில், சம்பளத்துடன் போனஸ் வழங்க தேவையான நிதியை சேகரித்து வருகின்றனர். ஆயுதபூஜை முடிந்த நிலையில் வரும் 12ம் தேதி முதல், பின்னலாடை தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் பட்டுவாடா துவங்குகிறது.

பெரும்பாலான உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 12ம் தேதி, சம்பளத்துடன், போனஸ் வழங்க திட்டமிட்டுள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி வரும் 25 ம் தேதி முதல் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.  தொழில் நிறுவனங்கள் வரும் 25ம் தேதிக்குள் போனஸ் வழங்கினால்தான் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள், மின்சாதன பொருட்கள், தங்க நகைகள், மோட்டார் வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற  நீண்ட கால ஆசைகளை பூர்த்தி செய்ய முடியும். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் காலதாமதம் இன்றி வரும் 25 ம் தேதிக்குள் போனஸ் வழங்க  வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Request workers ,
× RELATED போனஸ் வழங்காததை கண்டித்து...