×

பவானி வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 51 பேர் மீட்பு

மேட்டுப்பாளையம், அக்.9: கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தேக்கம்பட்டிக்கு செல்லும் வழியில் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் உள்ளது. பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆறு இரண்டு கிளைகளாக பிரிந்தோடுகிறது. ஆற்றின் நடுவே மண்திட்டு உள்ளது. கோவை கவுண்டர்மில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பaட்டோர் பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.
அப்போது, பவானி ஆற்றில் வெள்ளம் குறைந்த அளவே ஓடிக்கொண்டிருந்தது. ஒரு சிலர் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் நடுத்திட்டில் சமையல் செய்து சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மாலை நேரத்தில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பம்ப்ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்டதும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே அக்கம்பக்கம் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம் காவல் துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ஆற்றில் சிக்கி தவித்த 51 பேரையும் சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.

Tags : tragedy survivors ,Bhavani ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்