×

வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டுக்கு விரைவில் டெண்டர்

கோவை, அக். 9: கோவை வெள்ளலூரில் ரூ.178 கோடி ரூபாய் செலவில் 140 பேருந்துகள் நிற்கும் அளவிற்கு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும் என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை காந்திபுரத்தில் டவுன் பஸ்நிலையம், மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் என 4 பஸ் நிலையங்கள் உள்ளன. மத்திய பஸ் நிலையத்துக்கு திருப்பூர், ஈரோடு பஸ்கள் செல்கின்றன. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் தூத்துக்குடி, மதுரை, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன.

 இந்நிலையில் வளர்ந்து வரும் கோவை நகரை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியால் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை புறநகர் பகுதியான வெள்ளலூரில் ரூ.172 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெள்ளலூரில் 50 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன் பின் திட்ட ஆலோசகர்கள் மூலம் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.202.80 கோடி மதிப்பில் இறுதி திட்ட அறிக்கை மாநகராட்சியால் தயாரிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை, திட்ட அறிக்கையில் மாற்றம் என பல்வேறு காரணங்களால் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணிகள் துவக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், வெள்ளலூரில் 178 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணியானது விரைவில் துவக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. பேருந்து நிலையத்திற்கான நுழைவு வாயில் செட்டிப்பாளையம் மெயின் ரோட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் இந்த பேருந்து நிலைய வளாகத்திலேயே உக்கடத்தில் செயல்பட்டு வரும் லாரி பேட்டையும் இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

லாரிகள் வந்து செல்ல நுழைவு வாயில் கொச்சி பைபாஸ் சாலையில் அமைக்கப்படும். லாரி பேட்டை இடமாற்றம் செய்யப்படுவதால் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், உணவு விடுதி, விளம்பர பலகைகள் போன்றவை அமைக்கப்படும். அதில் இருந்து வரும் வருவாய் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்காக செலவிடப்படும். இந்த பேருந்து நிலையத்தில், நகர பேருந்துகள், மப்சல் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவை செயல்படும். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்படும். டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர் இரண்டு ஆண்டு காலத்திற்குள் பேருந்து நிலையத்தை கட்டிமுடிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED கோவையில் ஜூன் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்