×

பவானிசாகர் வட்டாரத்தில் விஜயதசமிக்கு அங்கன்வாடி மையம் திறக்கவில்லை

சத்தியமங்கலம்: அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்களும் திறக்கப்படவில்லை. மழலைகள் வகுப்பு தொடங்கிய அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்ட நிலையில் பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்களும் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் பிரீகேஜி, எல்கேஜி வகுப்புகளுக்கு அட்மிஷன் நடப்பது வழக்கம். இந்த நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கடந்த ஆண்டு முதல் பிரீகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு அதற்கு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து‘ விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது போல் அரசு பள்ளிகள்இணைந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை நடத்துமாறு தொடக்ககல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.மேலும் மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்குமாறு அறிவுறுத்தியது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் தயிர்பள்ளம், மாராயிபாளையம், மாரம்பாளையம் ஆகிய 3 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு துவங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட மையங்கள் ஆகும். இந்த 3 மையங்களும் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை. இதற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த 3 மையங்களிலும் சேர்க்கை நடைபெறவில்லை. இதேபோல் சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நேற்று திறக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Tags : Anganwadi Center ,Vijayadasamy ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்