×

குடிநீர் குழாயில் உடைப்பு திட்டப்பணிகளை நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டு பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலமாக மாநகராட்சி பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த பணிகளுக்காக ஆங்காங்கே குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட பகுதியான பழக்கார வீதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளில் பயன்படுத்த வைத்திருந்த இயந்திரங்களை சிறைபிடித்து பணிகளை செய்ய விடாமல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகளுக்காக குழி தோண்டும்போது ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து விடுகின்றனர். இதனால் நாங்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். கடந்த சில நாட்களாக தண்ணீர் இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் உடைந்துபோன குடிநீர் குழாயை சரி செய்யாமல் உள்ளனர். இதனால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம் என கூறினர். இது குறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது