×

தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்டத்தில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு

ஈரோடு: தீபாவளி பண்டிகையையொட்டி திருட்டு சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கடை வீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் 45 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு மாநகர பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, ஆர்.கே.விரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளுக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய சப்-டிவிசன் பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பிக்பாக்கெட், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு கோபுரங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு பைனாகுலர் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி செய்யும் நபர்களை பிடிக்கும் வகையில் மப்டியில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள், இதர பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கடை வீதி பகுதிகளுக்கு வந்து செல்வார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஆண்டு 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தோம். இந்த ஆண்டு 22 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல மாவட்டம் முழுவதும் 45 கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஈரோடு டவுன் பகுதியில் 60 சிசிடிவி கேமராக்கள் இருந்தன. தற்போது 250 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. போக்குவரத்தை சீர் செய்ய கூடுதலாக 40 போலீசார் நியமிக்கப்பட்டு 87 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடை வீதிகளுக்கு புத்தாடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். மேலும் ஏதாவது குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள போலீசாரிடம் தகவல் அளிக்க வேண்டும் என கூறினார்.

Tags : Organization ,district ,watch towers ,theft ,Diwali ,incidents ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு