×

மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் தொட்டி உடைந்து வீணாகும் குடிநீர்

ஆலந்தூர், அக். 9: மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில், உடைந்து சேதமான தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருவதால் தொட்டியை மாற்றி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மேற்கு வேளச்சேரி 177 வது வார்டுக்கு உட்பட்ட  கக்கன் நகர் 3 வது தெருவில் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் கடந்த 2 மாதத்துக்கு முன் ஓட்டை ஏற்பட்டு  தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. லாரி மூலம்  தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் தண்ணீர் பிடிக்கும் வரை இந்த ஓட்டையை யாராது கையால் மூடிக்கொண்டே இருக்க வேண்டும்.  இந்த தண்ணீர் தொட்டியினை மாற்றித்தரும்படி இந்த பகுதியில் உள்ளவர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை 177வது வட்ட மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இனியும் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உடைந்த தொட்டியை மாற்றித் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இங்குள்ள தொட்டி உடைந்து 2 மாதம் ஆகியும் இதனை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து 177வது வட்ட மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் நாள்தோறும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலையில் தினமும் அதிகளவில் தண்ணீர் வீணாவது தொடர்ந்தபடி உள்ளது. இதற்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Tags : West Velachery ,
× RELATED மேற்கு வேளச்சேரி கக்கன் நகரில் பழுதடைந்த குடிநீர் தொட்டி மாற்றம்