×

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

வேளச்சேரி, அக். 9: பள்ளிக்கரணையில் வசித்து வரும் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பள்ளிக்கரணை பரசுராமன் தெருவை சேர்ந்தவர் முனீர் உசேன் (40). தனியார் நிறுவன அதிகாரி. இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு 2 நாள் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது.இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி (21), பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சீனிவாசன் (24), மகபுல் பாஷா என்கிற பப்லு (22) மற்றும் சிறுவன் ஆகியோர்தான் முனீர்உசேன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சபரிநாதன் தலைமையில் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் வின்ெசன்ட், எஸ்.ஐக்கள் இளங்கனி, கண்ணன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ், சீனிவாசன், சிறுவனை போலீசார் கைது செய்தனர். பப்லு தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்கள் கொடுத்த தகவல்படி 40 சவரன் நகை, லேப்டாப் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை   ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர். பப்லுவை தேடி வருகின்றனர்.

Tags : persons ,home ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...