×

விஜயஅச்சம்பாடு கோயில் கொடை விழாவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் மக்களிடம் ஆதரவு திரட்டினார்

நெல்லை, அக். 4: நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விஜயஅச்சம்பாடு அம்மன் கோயில் கொடை விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணன் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் இறங்க உள்ளார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதன்படி விஜயஅச்சம்பாடு பகுதிக்கு சென்ற வேட்பாளர், அங்குள்ள அம்மன் கோயில் கொடை விழாவில் பங்கேற்ற பக்தர்கள் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அங்கு கலைநிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த வில்லிசை கலைஞர்களிடமும் ஆதரவு கேட்டார்.  நிகழ்ச்சியில் அதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்பி, சிந்தாமணி ஊராட்சி அதிமுக செயலாளர் ராமசுப்பு, பருத்திப்பாடு ஊராட்சி  செயலாளர் கணபதி, நல்லாங்குளம் பன்னீர்செல்வம், தோட்டக்குடி ஞானமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று காலை நெல்லை மற்றும் ரெட்டியார்பட்டியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை ரெட்டியார்பட்டி நாராயணன் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Tags : Narayanan ,AIADMK ,Vijaya Achambadu Temple Donation Ceremony ,
× RELATED நிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை...