×

கடையம் அருகே தொகுப்பு வீடு இடிந்து தாய், மகள் படுகாயம்

கடையம், அக். 4: கடையம் அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகள் படுகாயமடைந்தனர். ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் கென்னடி தெருவைச் சேர்ந்தவர் டேனியல்ராஜ்(43). இவரது மனைவி அமுதா(39). இவர்களுக்கு ஆல்ரியன்(18), அஸ்வின்(15) ஆகிய மகன்களும், ஜெபிஷா(14) என்ற மகளும் உள்ளனர். டேனியல்ராஜ் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். மூத்த மகன் ஆல்ரியன் வல்லநாடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக் படித்து வருகிறார். இதற்காக அவர் கல்லூரி ஆஸ்டலில் தங்கி இருந்தார். 2வது மகன் அஸ்வின் உள்ளூரில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பும், மகள் ஜெபிஷா அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருக்கும் வீடு, மானியத்தில் 25 ஆண்டுக்கு முன் அரசே கட்டிக்கொடுத்துள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், வீட்டின் பலம் நாளுக்கு நாள் குறைந்து தற்போது மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் பல தொகுப்பு வீடுகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அமுதா தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மகன் அஸ்வின் மட்டும் கட்டிலில் படுத்திருந்தான். தாயும், மகளும் தரையில் தூங்கினர். நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென இவர்களது வீட்டின் மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் அமுதா, ஜெபிஷா ஆகியோர் மீது சிமென்ட் காரைகள் விழுந்ததால் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு எழுந்த அஸ்வின், அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து தாய் மற்றும் சகோதரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிவாரணம் வழங்க எம்எல்ஏ கோரிக்கை
கோவிலூற்றில் நேற்று முன்தினம் ஊர் நலக்கூடம் இடிந்ததில் பலியான தாமரைவள்ளி குடும்பத்திற்கும், கருத்தப்பிள்ளையூரில் வீட்டின் மேற்கூரை சிமென்ட் காரைகள் விழுந்து காயமடைந்த தாய், மகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். சேதமான தொகுப்பு வீடுகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : house ,shop ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்