×

கர்ப்பப்பை சுழற்சியால் அவதி அறுவை சிகிச்சை மூலம் பசுவை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்

ஆலங்குளம், அக். 4: ஆலங்குளம் அருகே கர்ப்பப்பை சுழற்சியால் உயிருக்கு போராடிய பசுவை அறுவை சிகிச்சை மூலம் அரசு கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர். ஆலங்குளம் அருகே உள்ள வெண்ணிலிங்கபுரத்தை சேர்ந்தவர் சொரிமுத்து. விவசாயியான இவர், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இதில் நிறைமாத பசு, கன்று ஈன முடியாமல் தவித்து வந்தது. இதனால் சிகிச்சைக்காக வெண்ணிலிங்கபுரம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தார். பசுவை பரிசோதித்த கால்நடை மருத்துவர், கர்ப்பப்பை சுழற்சி காரணமாக அதன் வெளிவாய் திறக்கவில்லை. இதனால் கன்று இறக்கும் நிலை உள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மாட்டை காப்பாற்ற முடியும் என்று கூறினார். ஆனால் அறுவை சிகிச்சையை நெல்லை ராமையன்பட்டி அல்லது மதுரையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் மட்டுமே செய்வதற்கு வசதிகள் உண்டு.

இருப்பினும் பசுவின் நிலைமை மோசமானதால் வெண்ணிலிங்கபுரத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு தென்காசி கோட்ட உதவி இயக்குநர் முருகையா அனுமதி அளித்தார். நெல்லை மண்டல இணை இயக்குநர் தியோபிலிஸ் ரோஜர்  அறிவுரைப்படி வெண்ணிலிங்கபுரம் கால்நடை மருந்தகத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், ராமசெல்வம் தலைமையிலான குழுவினரால் பசுவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் பசுவின் வயிற்றில்  இறந்த நிலையில் இருந்த கன்றுக்குட்டி அகற்றப்பட்டு தாய் பசு காப்பாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்தில் பசு சகஜநிலைக்கு திரும்பியது. எவ்வித அடிப்படை வசதியும் இன்றி பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்த அரசு கால்நடை மருத்துவர்களை பொதுமக்கள் பாராட்டினர். ஏற்கனவே இதே மருத்துவர்கள் கடந்த டிசம்பரில் ஒரு பசுவின் வயிற்றில் இருந்து 4 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கயிறுகள், ரப்பர் டயர் டியூப்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்ட ஜீரணமாகாத பொருட்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Government doctors ,
× RELATED மதுரையில் நாளை நடைபெறவிருந்த வெளி...