×

பள்ளி வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி தலைமை ஆசிரியை சிறைபிடிப்பு

திருச்செந்தூர், அக்.4:  திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணற்றில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 93 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  தலைமை ஆசிரியையாக நிர்மலா சாந்தலீலா பணியாற்றி வருகிறார்.
பள்ளி வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி அவரை இடமாற்றக்கோரி சுதந்திர தினத்தன்று இப்பகுதி மக்கள் கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதையடுத்து தலைமையாசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதன்பேரில் நா.முத்தையாபுரம் பள்ளிக்கு பணியில் சேர சென்ற அவருக்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணியில் சேராமல் சென்றுவிட்டார்.இதற்கிடையே செப்.13ம் தலைமைஆசிரியை மீண்டும் கீழநாலுமூலைகிணறு பள்ளி பணிக்கு சென்றார். கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் அங்கு தலைமைஆசிரியையை திருப்பி அனுப்பினர். அதன்பிறகே பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்.

ஆனால் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட தலைமைஆசிரியை தினமும் திருச்செந்தூரில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் தலைமைஆசிரியை கடந்த காலாண்டு தேர்வு முடியும் நாளில் பள்ளிக்கு வந்து வருகைபதிவேட்டில் கையெழுத்திட்டு சென்றதாக கூறப்படுகிறது. விடுமுறைக்குபின் நேற்று கீழநாலுமூலைகிணற்றில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. மாலை வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் தலைமைஆசிரியை பள்ளிக்கு வருகை பதிவேடில் கையெழுத்திட சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த கிராம மக்கள் பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியைகளையும், மாணவர்களையும் அனுப்பிவிட்டு தலைமைஆசிரியையை வகுப்பில் சிறைவைத்து பள்ளி கேட்டை பூட்டினர். தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தலைமைஆசிரியையை மீட்டு அனுப்பி வைத்தார்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் பள்ளி வளர்ச்சி ஒத்துழைக்காத தலைமை ஆசிரியையை இடமாற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரி ஒத்துழைப்புடன் அவர் பள்ளிக்கு வந்து வருகை பதிவேட்டில கையெழுத்திட்டுள்ளார். இதனால் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்த வேண்டி நிலை ஏற்பட்டது என்றனர்.

Tags : headmaster ,
× RELATED பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்