×

மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு மாநகரில் 8 பேருக்கு டெங்கு

திருப்பூர்,அக்.4: திருப்பூர் மாநகர் பகுதியில் 8 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் பகுதி பின்னலாடை தொழில்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மாநகரில் சுகாதார ஏற்பாடுகள் முற்றிலும் பின் தங்கியுள்ளது. மாநகரப்பகுதிகளில் உள்ள வார்டுகளில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி பணியாளர்கள் வருவதில்லை. இதனால் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை ரோட்டில் வைத்திருக்கும் குப்பை தொட்டிகளில் வீசிச்செல்கிறார்கள். அந்த குப்பை தொட்டியில் தேங்கக்கூடிய குப்பைகளையும் மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து அப்புறப்படுத்துகிறார்கள்.  இதனால் குப்பைகளில் கொசுக்கள் அதிகப்படியாக உருவாகிறது. மேலும் வீதிகளில் உள்ள சாக்கடைகளை தூர்வாருவதில்லை.  இதனால் சாக்கடைகளில் உற்பத்தியாகக்கூடிய கொசுக்கள் கடிப்பதால் தொற்று நோய்கள், மர்மகாய்ச்சல்கள் ஆகியவைகள் உருவாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிகமானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்குள்ளானார்கள். அந்த பிரச்னை ஓய்ந்து சில மாதங்களிலிலேயே மீண்டும் மாநகரப்பகுதிகளில் மர்ம காய்சல் விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது.

மர்மகாய்ச்சலால் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மர்மகாய்ச்சல் பாதிப்புகளுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பிற்கு உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர்.   இது குறித்து சமூக ஆர்வலகர்கள் கூறியபோது:  திருப்பூர் முழுவதுமே குப்பைகள் அள்ளவோ, சாக்கடைகள் தூர்வாரவோ மாநகராட்சி ஊழியர்கள் யாரும் வருவது கிடையாது. போராட்டம் நடத்தினால் மட்டும் இரண்டு நாட்களுக்கு முறையாக குப்பைகளை அள்ளுகிறார்கள். அதன் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுகிறார்கள். மேலும் திருப்பூரின் பி.என். ரோட்டில் உள்ள சில பகுதிகளிலும், காலேஜ் ரோடு பகுதியிலும் சில பொதுமக்களுக்கு மர்மகாய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிந்தால் மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் உடனடியாக குப்பைகள் அள்ளுவது, சாக்கடைகள் தூர்வாருதல், கொசு மருத்து என்ற பெயரில் புகை அடிப்பது போன்ற பணிகளை செய்கிறார்கள். இதனை முன்னரே மாநகரப்பகுதிகளில் செய்திருந்தால் இது போன்ற மர்ம காய்ச்சல்களை தவிர்த்திருக்கலாம். இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்கவேண்டும். பொதுமக்களை நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் கேட்டபோது:  திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் டெங்கு ஒழிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. திருப்பூர் மாநகரில் இதுவரை 8 பேருக்கு மட்டும் தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதற்கும் மருத்துவமனையில் சிறந்த முறையில் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். வீடுவீடாக மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீர் பரிசோதனை செய்து வருகிறார்கள். இதனால் டெங்கு காய்ச்சல் கட்டுபாட்டில் தான் இருக்கிறது. சுகாதார பணியாளர்களை மேலும் தீவிரமாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

Tags : city ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு