×

போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் கொழுமம் பிரிவு பகுதியில் விபத்துகள் அதிகரிப்பு

உடுமலை,அக்.4: உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில், கொழுமம் பிரிவு முக்கியமான பகுதியாகும். தெற்கு பகுதியில் இருந்து உடுமலை நகருக்கு வரும் நுழைவு வாயிலாக இது உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்த பகுதியில் போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. ஒழுங்குமுறையின்றி கொழுமம் பிரிவுக்கு திரும்பும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. இதனால் இங்கு போக்குவரத்து காவலரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு இங்கு 3 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து காவலர்கள் இதை கண்காணித்து வந்தனர். ஆனாலும் போக்குவரத்து குளறுபடியும், விபத்துகளும் குறையவில்லை.

காரணம், கேமரா பொருத்தியதோடு சரி, கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சமீபத்தில் கொழுமம் பிரிவில் ஒரு வாகனம் பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை மானிட்டரில் பார்த்தும்கூட, அந்த இடத்துக்கு காவலர்கள் யாரும் வரவில்லை. நீண்ட நேரத்துக்குப்பின் பொதுமக்களே வாகனத்தை தள்ளி ஓரம் கட்டி, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.
எனவே, கொழுமம் பிரிவில் காவலரை நியமித்து கண்காணிக்க வேண்டும். கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்த்து, ஏதாவது பிரச்னை என்றால் உடனே அந்த இடத்துக்கு போலீசார் வந்து நிலைமை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி