வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் உஷார் நிலையில் இருக்க வேண்டும்

ஊட்டி, அக். 4:வடகிழக்கு பருவமழையின் போது மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அனைத்து அரசுத்துறைகளும் உஷார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழையின் போதும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், ஆண்டு தோறும் பேரிடர் ஏற்பட்டு வருகிறது.
இம்முறை தென்மேற்கு பருவமழை பொய்த்த போதிலும் கடந்த மாதம் பெய்த மழையின் போது பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், ஊட்டியில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலைகளில் பல பகுதிகளில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஒன்றரை மாதம் கடந்த பின்னே ஊட்டி-கேரள இடையே கூடலூர் வழித்தடத்தில் வாகன போக்குவரத்து துவக்கபட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி அடிக்கடி அணைகள் திறக்கப்படுகிறது. மேலும், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இன்று வரை மழை நீர் வடியவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் ஊட்டி-மஞ்சூர் வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை அரங்கில் நடந்தது.  
மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின் விசை நிதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் காம்ளே தலைமை வகித்தார். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழையின் போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து அரசுத்துறைகளும் உஷார் நிலையில் இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Northeast ,monsoon advisory meeting ,
× RELATED நாமக்கல்லில் நாளைகிழக்கு மாவட்ட திமுக கூட்டம்