×

காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையில் ஈடுபட்ட 67 பேர் கைது

கோவை, அக்.4:காந்தி ஜெயந்தி தினத்தன்று மது விற்பனையில் ஈடுபட்டதாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 67 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1165 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் உள்ள மதுபான பார்களுக்கு அரசு விடுமுறை அறிவித்து, மது விற்பனைக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் பல இடங்களில் அரசின் தடையை மீறி மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை ராம்நகர் நேரு வீதியிலுள்ள டாஸ்மாக் கடையில் மது விற்றதாக தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த ஊழியர் ரவி (32) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 65 மதுபாட்டில், ரூ.1900 பறிமுதல் செய்யப்பட்டது.

கிராஸ்கட் ரோடு 9வது வீதி டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த பாஸ்கரன் (39) கைது செய்யப்பட்டு, 99 பாட்டில் மது, ரூ.1180 பறிமுதல் செய்யப்பட்டது. ரத்தினபுரி 7வது வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளிமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் (50) கைது செய்யப்பட்டு, 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் பல்ேவறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 பேர் கைது செய்யப்பட்டு, 550 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை புறநகர் மாவட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சூலூரில் உள்ள ரெஸ்டாரன்டில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், புதுப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (31) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிட்டாம்பாளையம் பகுதியில் மதுரை மேலூரை சேர்ந்த அஜித்குமார் (25) கைது செய்யப்பட்டு, 122 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆழியார் பக்கமுள்ள அர்த்தனாரிபாளையத்தில் மது விற்றதாக அங்கலக்குறிச்சியை சேர்ந்த செல்வம் (30) கைது செய்யப்பட்டு, 50 பாட்டில் மது மற்றும் 3150 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புறநகர் மாவட்டம் முழுவதும் 35 பேர் கைது செய்யப்பட்டு, 615 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1165 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Gandhi Jayanthi Day ,
× RELATED மது விற்ற 9 பேர் கைது