×

மாநகராட்சியில் 60 இடங்களில் பயோ டைஜஸ்டர் முறையில் குப்பைகள் சேகரிப்பு

ஈரோடு, அக்.4: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை குறைக்கும் வகையில் 60 இடங்களில் பயோ டைஜஸ்டர் முறையில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள், உரமாக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளில் தினமும் 220 முதல் 230 மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வைரபாளையம், வெண்டிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்பட்டு வந்தது.தற்போது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதிகளில்  சேரும் குப்பைகளை குறைக்கவும், வெண்டிபாளையம், வைராபாளையம் குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகள் அனைத்தும் ராட்சத இயந்திரங்கள் மூலம்  உரமாக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே உரமாக்குதல் திட்டத்தின்கீழ் பயோ டைஜஸ்டர் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. வீடுகளில் மீதமாகும் உணவு பொருட்கள், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை தனியாக பிரித்தெடுத்து அதை உரமாக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.இத் திட்டத்தில், ஆயிரம் லிட்டர், 2 ஆயிரம் லிட்டர் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் பிளாஸ்டிக் டேங்க் வைத்து அதன் கீழ் பகுதியிலும், 2 அடி உயரத்திற்கும் துளைகள் இட்டு அதை பூமிக்கு அடியில் புதைத்து வைக்கின்றனர். பின்னர், வீடுகளில் சேகரிக்கப்படும் உணவு மற்றும் காய்கறி கழிவுகள் 10 கிலோவில் இருந்து அதிகபட்சமாக 50 கிலோ வரை இந்த டேங்கில் கொட்டப்படுகிறது. அதில், இருந்து உருவாகும் வாயு மூலம் கழிவுகள் உரமாக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதிகளில் 60 இடங்களில் பயோ டைஜஸ்டர் முறையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட குப்பைகள் தற்போது உரமாக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து பொதுமக்களுக்கு வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்த வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு 4வது மண்டலத்திற்குட்பட்ட பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கி உரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன், சுகாதார ஆய்வாளர் நாச்சிமுத்து மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு