×

வர்த்தக நிறுவனம் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் லாரிகளால் அவதி

ஈரோடு, அக்.4: ஈரோடு மாநகரின் மைய பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்குவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஈரோடு மாநகரில் பெருகி வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், பாதாள மின்கேபிள் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடந்து வருவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மாநகரில் அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ள கொங்காலம்மன் கோயில் வீதி,  கந்தசாமி வீதி, புது மஜீத் வீதி, குப்பைக்காடு, காமராஜர் மேல்நிலைப்பள்ளி வீதி ஆகிய பகுதிகளில் மொத்த வியாபார மளிகை கடைகள், பேன்சி கடைகள், ஜவுளிக்கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன.இந்த பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள், நடுரோட்டிலேயே நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்கி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து லாரி ஓட்டுநர்களிடம், வாகன ஓட்டிகள் கேட்டால் ஆபாச வார்த்தைகளால் பேசுவதுடன் வாகன ஓட்டிகளை மிரட்டி வருகின்றனர். குறிப்பாக, புதுமஜீத் வீதி, கிழக்கு கொங்காலம்மன் கோயில் வீதி வழியாக கருங்கல்பாளையம், மார்க்கெட், நகைக்கடை போன்ற பகுதிகளுக்கு லாரிகள் சென்று வருகின்றன. இங்குள்ள கடைக்காரர்கள், போலீசாரை கவனித்துக் கொள்வதால் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி, இறக்க தடை விதிப்பதுடன் இதுபோன்ற செயலில் ஈடுபடும் லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Avadi ,areas ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!