×

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில் கடன் வழங்கும் முகாம் இன்று துவக்கம்

ஈரோடு, அக். 4: ஈரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் மக்களுக்கு  கடன் வழங்கும் முகாம் பரிமளம் மகாலில் இன்று துவங்குகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கனரா வங்கி பொதுமேலாளர் அரவிந்தன் நேற்று நிருபர்களுக்கு கூறியதாவது:மத்திய அரசு சார்பில் வங்கிகளில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் நேற்று முதல் 10ம் தேதி வரை கடன் வழங்கும் முகாம் நடக்கிறது.இதில், ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் இன்று (4ம் தேதி) முதல் 6ம் தேதி வரை முகாம் நடக்கிறது. இந்த முகாமில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஐஓபி, பாங்க் ஆப் பரோடா உட்பட அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகளும் கலந்து கொள்கின்றன.

மேலும், சிட்பி, நபார்டு, மாவட்ட தொழில் மையங்களும் பங்கேற்கின்றன. இந்த முகாமில், சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகன கடன், கல்வி கடன், தனி நபர் கடன், சுய உதவிக்குழு கடன் போன்றவை வழங்கப்படுகிறது. மக்களுக்கு உள்ள கடன் வாய்ப்புகள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த முகாமின் நோக்கம். கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அவர்களுக்கு முகாமிலேயே கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இம் முகாமில், 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கும் முகாமை  கலெக்டர் கதிரவன் துவங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Debt Relief Campaign ,Banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்