×

காமராஜர் நகர் தொகுதியில் 9 பேர் களம் காண்கின்றனர்

புதுச்சேரி, அக். 4:    புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.   புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.  காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ், நாம் தமிழர் என 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலா துறை இயக்குனர் அலுவலகத்தில் மனுக்கள் பரிசீலனை கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் ஜார்ஜ் அகஸ்டின் என்ற சுயேட்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஜான்குமார், என்ஆர் காங்கிரஸ் புவனேஸ்வரன் உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை நேற்று வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நாம் தமிழர் மற்றும் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் 2 பேர் மனு தாக்கல் செய்திருந்ததால் அவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றார். அதன்படி, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் செண்பகவள்ளி, நாம் தமிழர் கட்சி தேவிகா ஆகியோர் மனுவை திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து, மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் ஜான்குமாருக்கு கை சின்னமும், என்ஆர் காங்கிரஸ் புவனேஸ்வரனுக்கு குவளை சின்னமும், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வெற்றிசெல்வத்துக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னமும், நாம் தமிழர் கட்சி பிரவீனாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும், அகில இந்திய மக்கள் கழகம் கோவிந்தராஜ்சுக்கு வாளி சின்னமும், மக்கள் விடுதலை கட்சி பார்த்தசாரதிக்கு படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு சின்னமும், சுசி கம்யூனிஸ்ட் லெனின்துரைக்கு டார்ச் லைட்டும், சுயேட்சைகள் சகாயராஜ்சுக்கு ஊதல் சின்னமும், சுகுமாரனுக்கு பிரஷர்குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 9 பேரும் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர்.  வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, மனுக்கள் வாபஸ் என கடந்த சில நாட்களாக தேர்தல் களம் சூடு பிடிக்கவில்லை. இப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் தேர்தல் அலுவலகங்கள் இன்று திறக்கப்படவுள்ளது. சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால் தங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் கருதுகிறது.  தொடர் தோல்விகளால் துவண்டிருந்த என்.ஆர் காங்கிரஸ் சட்டசபைக்கு முன்னோட்டமாக இத்தொகுதியை வென்றெடுக்க வேண்டுமென விரும்புகிறது.

 இதற்கேற்ப பிரசார வியூகத்தை வகுத்து வருகின்றனர். குறிப்பாக ரங்கசாமி கடைசி மூன்று நாளில் பிரசாரம் செய்யும் தனது போக்கை கைவிட்டு, தொடர்ந்து 16 நாட்களும் வீதி, வீதியாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.   மாலை நேரங்களில்  திண்ணைபிரசாரம், அதிருப்தியில் உள்ள காங்கிரசாரை வளைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் நிரம்பியுள்ள தொகுதியில் பணபலம் மட்டுமே எடுபடாது என்பதால், மக்களை சந்தித்து நேரடியாக ஆதரவு திரட்டும் என்.ஆர் காங்கிரசின் வியூகம் எடுபடுமா? என்பது தற்போதைக்கு தெரியவில்லை.  இலவச அரிசி திட்டம், முதியோர் உதவித்தொகை அதிகரிக்காதது, புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்காதது. மின்சார கட்டணம், குடிநீர், குப்பை வரி உயர்வு என ஆளும் கட்சி தோல்விகளை தெரிவித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : Nine ,constituencies ,Kamaraj Nagar ,
× RELATED சாய்பாபா வழிபாடு