×

அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வில்லியனூர், அக். 4:    புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் வீடு வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியில் உள்ளது. இவர் ேநற்று காலை சொந்த வேலை காரணமாக சேலம் சென்றுவிட்டு மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது 1031 என்ற கவர்னர் மாளிகையின் புகார் எண்ணுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து கண்காணிப்பு அறையில் இருந்து அமைச்சர் மற்றும் வெடிகுண்டு பரிசோதனை நிலையம், வில்லியனூர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மேற்கு எஸ்பி ரங்கநாதன், தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சரண்யா மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழு எஸ்பி ரகுநாயகம் தலைமையில் வெடிகுண்டு பரிசோதனை குழு மோப்பநாய் ரேம்போ, ஜோட்டோ ஆகியவற்றுடன் அமைச்சர் வீட்டிற்கு வந்து பரிசோதனையில் ஈடுபட்டனர்.   அமைச்சர் நமச்சிவாயத்தின் வீடு, அறை, தோட்டம், கார் ஷெட், கார் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. எங்கேயும் வெடிகுண்டு இல்லை. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள மற்றொரு வீட்டுக்கு வெடிகுண்டு பரிசோதனை குழு விரைந்தது. பிறகு கண்காணிப்பு அறைக்கு வந்த எண்ணை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அந்த எண் புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் சிக்னல் காட்டியதாக தெரியவந்தது.

உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காலாப்பட்டு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் குற்றவாளியை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு நம்பிக்கை நகர் பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி மகன் புவனேஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் சென்னையில் தமிழக அமைச்சர் ஒருவர் என அனைவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது.  இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அப்போது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இவர் செய்தித்தாள் அதிகளவில் படிப்பதாகவும் அதில் யாருடைய செய்தி அதிகம் வருகிறதோ அவருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள், அவரின் வீட்டு முன்பு அதிகளவில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Namachivayam ,home ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...