×

வானூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள்

வானூர், அக். 4:  வானூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வானூரில் வட்டாட்சியர் அலுவலகம், வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டார வளமையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. எனவே இங்கு தினமும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.ஆனால் அந்த நேரத்தில் இந்த வழித்தடத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. அதுவும் ஒருசில தடவை வரும்வகையில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் ஒன்றிரண்டு பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், கூரையில் ஏறி பயணிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. எனவே காலை, மாலையில் முக்கிய நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Vanur ,
× RELATED பாமக, பாஜ வேட்பாளர்கள், அன்புமணி மனைவிக்கு பிரசாரம் செய்யாத ராமதாஸ்