×

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மானாமதுரை நாட்டார் கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்

மானாமதுரை, அக்.4: மானாமதுரையில் சருகனியாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள நாட்டார் கால்வாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் முதலமைச்சர் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நாட்டார்கால்வாய் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், மானாமதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது முதலமைச்சர் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் வாக்குறுதியாக தேர்தல் முடிந்தவுடன் நாட்டார் கால்வாய் சீரமைத்து தரப்படும் என தெரிவித்தார். வாக்குறுதி அளித்த திட்டத்தை நிறைவேற்றும் விதமாகவும், இப்பகுதி மக்கள் காட்டிய அன்பிற்கு நன்றியாகவும், தற்பொழுது இப்பணியை துவக்க உத்தரவிட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நாட்டார் கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வைகையாற்றில் தளவாய்ப் பகுதியான கிருங்காக்கோட்டையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு 18 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இக்கால்வாய் பயனுள்ளதாக இருக்கும். இதனால் வைகையாற்றில் தண்ணீர் வரும்போது நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதால் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் முழுவதும் பயன்பாட்டிற்கு வருவதுடன் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். மேலும், அப்பகுதி வழியாக தண்ணீர் செல்லும் போது சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். அதனால் குடிநீர் ஆதாரங்கள் உயரும். என்றார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை முன்னாள் எம்பி செந்தில்நாதன், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் மாரிமுத்து, சருகனியாறு வடிநிலக் கோட்ட உதவிப்பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Manamadurai Nadar Canal ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...