×

நாய்கள் கடித்து புள்ளி மான் சாவு: மயில் தப்பியது

தேவகோட்டை, அக்.4: தேவகோட்டை அருகே கோட்டூர் மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலையில் ஒன்றரை வயதே ஆன புள்ளி மான்குட்டி ஒன்று துள்ளிக் குதித்து வந்தது. அதனைக் கண்ட நாய்கள் மான்குட்டியை விரட்டி கடித்தன. நாய்களிடம் கடிபட்ட மான்குட்டி படுகாயமடைந்து உயிரிழந்தது. தகவல் அறிந்த வனப்பாதுகாவலர் பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று மானை கைப்பற்றினார். கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்குப் பின்னர் புதைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக காடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மேலும் கருவேல மரங்களை அரசு டெண்டர் எடுத்தவர்கள் அழித்து வருகின்றனர். காடுகள் அழிந்து வரும் காரணத்தால் அங்கு சுற்றித்திரிந்த மான்கள் ஊருக்குள் வந்து நாய்களிடம் கடிபட்டு இறப்பது வாடிக்கையாகி விட்டது.

நேற்று காலையில் தேவகோட்டை பெருமாள் கோவில் அருகே ஒரு வீட்டின் சுவர் ஓரமாக மயில் ஒன்று பறக்க முடியாமல் படுத்த நிலையில் இருந்தது. அங்குள்ளவர்கள் வனப்பாதுகாவலருக்கு தகவல் அளித்தனர். அதனைத்தொடர்ந்து வனச்சரகர் பரஞ்சோதி மயிலை பார்வையிட்டார். அதன் கழுத்தில் வீக்கம் இருந்ததால் வலி தாங்காது படுத்துக் கிடந்துள்ளது. மயிலுக்கு தேவகோட்டை கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மயில் எழுந்தது. பின்னர் அதனை காட்டிற்குள் விட்டனர்.  

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்