×

குண்டும் குழியுமாக மாறிய தலைக்குளம்-உடையூர் சாலை

சேத்தியாத்தோப்பு, அக். 4: சேத்தியாத்தோப்பு அருகே தலைக்குளம் கிராமத்தில் இருந்து உடையூர் கிராமத்திற்கு செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அருகே தலைக்குளம் கிராமத்திலிருந்து உடையூர் கிராமம் வரைக்கும், விருத்தாச்சலம் - புவனகிரி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சாலை செல்கின்றது. தலைக்குளம், மருதூர், கொளக்குடி, அம்பாள்புரம், பிரசன்ன ராமாபுரம், உளுத்தூர் உட்பட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் நெல், உளுந்து போன்றவைகளை மார்க்கெட் கமிட்டிகளுக்கு எடுத்து செல்லவும் இந்த சாலையைத்தான் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளை நிலங்களில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை சேதமான சாலை வழியாக குறித்த நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். பேருந்து, இரு சக்கர வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும்போது பஞ்சராகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் புதிய தார் சாலை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,Thalakkulam-Udayur ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...