×

சென்னை அண்ணா பல்கலை என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெய்வேலி, அக். 4: புதிய தொழில்களை தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனம், பெங்களூரு இந்திய அறிவியல் நிலையம், சென்னை இந்திய தொழில்நுட்ப நிலையம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சி மையங்களை அமைத்திட பூர்வாங்க  பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதுதொடர்பாக பெங்களூரு இந்திய அறிவியல் நிலையத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், அதன் அடுத்தக்கட்டமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு ஆராய்ச்சி மையத்தினை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் அதன் ஆராய்ச்சி மையத்தின் தலைமை அதிகாரி டாக்டர் மனோகரனும், அண்ணா பல்கலையின் சார்பில் அதன் பதிவாளர் டாக்டர் கருணாமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை, அண்ணாபல்கலைகழகம் அக்கல்வி நிலைய வளாகத்தில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஆய்வு மையத்தினை அமைக்கவிருப்பதுடன், நெய்வேலி என்எல்சி இந்தியா வளாகத்தில் ஒரு பணித்தளத்தையும் ஏற்படுத்த உள்ளது. இதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ரூ. 495 லட்சத்து 65 ஆயிரம் நிதியை பயன்படுத்தி நவீன முறையில், அறிவியல் பூர்வமாக தொழில் தொடங்க முன்வரும் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு அண்ணா பல்கலையானது வழிகாட்டுதல்களை வழங்கும்.நெய்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவனத்தலைவர் ராக்கேஷ்குமார், இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் என்எல்சி இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைமை அதிகாரி டாக்டர் மனோகரன் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் துறை கல்வி நிலைய இயக்குநர் டாக்டர் நடராஜன் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags : Chennai ,NLC ,Anna University ,
× RELATED ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17...