×

விருத்தாசலம் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

விருத்தாசலம், அக். 4: விருத்தாசலம் பெரியார் நகரில், விருத்தாசலம் காவல் நிலையம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆதி, புஷ்பராஜ், கணேசன், அபிதா பழமுதிர்ச்சோலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் ஏஎஸ்பி தீபா சத்தியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், விருத்தாசலம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் திருட்டு, செயின் பறிப்பு. கலவரம் வீடு புகுந்து கொள்ளை யடிப்பது உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்பேரில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விருத்தாசலம் பகுதியில் பெரியார் நகர், புதுக்கூரைப்பேட்டை பைபாஸ் ரோடு, சித்தலூர் பைபாஸ் ரோடு, பொன்னேரி பைபாஸ் ரோடு, காட்டுக்கூடலூர் ரோடு, ரயில்வே நிலையம் ஆகிய பகுதிகளிலும் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாத்தூர், தொட்டிக்குப்பம், முகாசப்பரூர் ஆகிய பகுதிகளிலும், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருவேப்பிலங்குறிச்சி கடைவீதி, பெட்ரோல் பங்க், குறுக்கத்தஞ்சேரி, பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ரயில் நிலையம், சக்கரை ஆலை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ரூ.3 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மிக சுலபமாக கண்டுபிடிக்க முடியும், அதுபோன்று வாகன விபத்து நடைபெற்றால் அவர்களைப் பற்றி கண்டறிய உதவும். மேலும் தற்போது பண்டிகை நாட்கள் வரஇருப்பதால் ஆங்காங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அப்போதைய காலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து போக்குவரத்தை சரி செய்ய உதவும்.இதுபோன்று பல்வேறு தேவைகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் தற்போது அனைத்து பகுதிகளிலும் பொருத்தி வருகிறோம் என்றார். தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராத தொகை விதித்து ரசீது வழங்கப்பட்டது.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...