×

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டம்

பண்ருட்டி, அக். 4: சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரியும், மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள் நேற்று நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவாமூர் ஊராட்சியில் உள்ள காமாட்சிபேட்டை கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களுமே அதிகளவு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 30 ஆண்டிற்கு மேலாக கட்டப்பட்ட மேனிலை தொட்டி சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தெரு விளக்குகள் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதையடுத்து  குடிநீர், தெருவிளக்கு, புதிய மேனிலைத்தொட்டி, சுடுகாடு, இடுகாடு போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு மனுக்கள் வழங்கப்பட்டன. நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீ பந்த போராட்டம் அறிவித்திருந்தனர். இதையடுத்து ஒரு மாதத்தில் நிறைவேற்றி தருவதாக கூறிய அதிகாரிகள், கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலையில் தண்ணீர் தேங்கி நின்று, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.இந்த நிலையில், புதிய சாலை அமைத்திட கோரி நேற்று திடீரென சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் வடமலை தலைமையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய பிடிஓ ரவிச்சந்திரன், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக சாலையில் செம்மண் அடிக்கப்பட்டது. சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.1.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருசில நாட்களில் பணி துவங்கும் எனவும், மேலும் முழுமையான குடிநீர் கிடைக்கவும், புதிய மேனிலைத்தொட்டி அமைத்து தரப்படும், மற்ற அடிப்படை வசதிகளும் நிதி நிலைக்கேற்ப செய்து தரப்படும். அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...