×

காட்பாடி- அரக்கோணம் மார்க்கத்தில் தண்டவாளத்தில் திடீர் விரிசலால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி

அரக்கோணம், அக்.4: காட்பாடி- அரக்கோணம் மார்க்கத்தில் நேற்று தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.வேலூர் மாவட்டம், காட்பாடி- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் மகேந்திரவாடி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை ரயில்வே ஊழியர்கள் ரோந்து மற்றும் தண்டவாள பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.நேற்று காலை சுமார் 7.15 மணியளவில் மகேந்திரவாடி அருகே உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இவ்வழியாக ரயில்களை இயக்க வேண்டாம் என சோளிங்கர் (பாணாவரம்) ரயில் நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்தனர். இதனால் அவ்வழியாக வந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் தற்காலிகமாக காலை 7.35 மணியளவில் சரிசெய்தனர். இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோலார்பேட்டை- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ், வேலூர்- அரக்கோணம் பாசஞ்சர் ரயில், திருவனந்தபுரம்- சென்னை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மற்றும் வடமாநிலம் செல்லும் டேராடூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 45 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உரிய நேரத்தில் ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மகேந்திரவாடி பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : railway junction ,Katpadi-Arakkonam ,
× RELATED தொடரும் ஊரடங்கால் பஞ்சராகி போன சரக்கு...