×

சம்பா, தாளடியில் வரப்பு பயிர்களை சாகுபடி செய்து உபரி வருவாய் ஈட்டலாம் விவசாயிகளுக்கு ஆலோசனை

அரியலூர், அக். 4: சம்பா மற்றும் தாளடியில் வரப்பு பயிர்களை சாகுபடி செய்து உபரி வருவாய் ஈட்டலாம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த பூச்சிநோய் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக வரப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம். காய்கறி, தீவனப்புல், உளுந்து, துவரை போன்ற பயறுவகை பயிர்கள், மலர்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் நெல் வயலில் உகந்த சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டு இயற்கை எதிர்பூச்சிகள் பெருகி ஒரு சமநிலையை பேணுவதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.வரப்புபயிர் சாகுபடி செய்வதால் பரப்பில் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. வரப்பில் உள்ள களைகள் தான் சாகுபடி இல்லாத காலங்களில் பூச்சிகளுக்கு மாற்று வாழ்விடமாக அமைகிறது. வரப்புப்பயிர் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

அடர்மஞ்சள் நிறமுள்ள பூக்களை தரவல்ல சூரியகாந்தி மற்றும் செண்டிப்பூ பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் இயற்கை எதிர்பூச்சிகள் வெகுவாக கவரப்பட்டு பல்கி பெருகும். மேலும் இந்த பயிர்கள் கூடுதல் வருமானத்தை தந்து பொருளாதாரத்தை மேம்படுத்தும். காய்கறி பயிரான வெண்டை நமக்கு தேவையான காய்கறிகளையும் பயறுவகை பயிர்கள் உபரி வருமானம் தருவதோடு காற்றில் உள்ள தழைச்சத்தையும் கிரகித்து நிலைநிறுத்துகிறது. செண்டிப்பூ வரப்பில் பயிரிடுவதன் மூலம் உபரி வருமானம் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் வரப்பில் பயிரிட 100 கன்றுகள் தேவை. இதன்மூலம் 50- 100 கிலோ மகசூல் கிடைப்பதன் உபரி வருமானமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய பின்னேற்பு மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.150 மானியமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி வரப்பு பயிர் சாகுபடி செய்து பயன்பெறலம். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Samba ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்