×

பைக்கில் வந்து செயின் பறித்த இருவர் கைது 38 பவுன் நகை மீட்பு

நித்திரவிளை, அக் 4: குமரி  மாவட்டத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து செயின் பறிப்பு சம்பவத்தில்  ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 38 பவுன் நகை  மீட்கப்பட்டன.நித்திரவிளை  அருகே ஆலங்கோட்டில், கடந்த வருடம் பைக்கில் ஹெல்மெட் அணிந்து  வந்து ஓய்வு பெற்ற ஆசிரியை முத்தாட்சியிடம்(70) செயினை பறித்து சென்ற  வழக்கு, எஸ்.டி. மங்காடு, தெக்குவிளை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு  முன் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி தாசம்மா(80) என்பவரின் கழுத்தில்  கிடந்த செயினை அறுத்து சென்ற வழக்கு, அதுபோல் கொல்லங்கோடு அருகே  வெங்குளம்கரையில்  ஸ்கூட்டியில் சென்ற அனிதா என்ற  பெண்ணிடம் செயினை அறுத்து சென்ற வழக்கு உட்பட பல்வேறு செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிகள் சிக்காமல்  இருந்தனர். இந்த சம்பவங்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி நாத்  உத்தரவின்பேரில் குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், கொல்லங்கோடு  இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், தனிப்படை எஸ்ஐ ஜாண் போஸ்கோ மற்றும் போலீசார்  நேற்று காலை கண்ணனாகம் சந்திப்பில் சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில்  வந்த இரு வாலிபர்களை   மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள  மாநிலம் பூந்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சஜன்(26) , அடிமலத்துறை   கிராமத்தை சேர்ந்த ரோய்(23)  என்பதும் இவர்கள்  பைக் திருட்டு வழக்கில்  சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் கிடுக்கிப்பிடி விசாரணை  செய்ததில் கொல்லங்கோடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று  செயின் பறிப்பு சம்பவமும், நித்திரவிளை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட  பகுதிகளில் இரண்டு செயின் பறிப்பு சம்பவமும், புதுக்கடை, வெள்ளிசந்தை காவல்  நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒரு  செயின் பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.  தங்க செயிகளை  திருவனந்தபுரம் சாலை மார்க்கெட்டில் விற்பனை செய்து நண்பர்களுடன் ஜாலியாக  செலவிட்டதாக கூறினர் . இது சம்பந்தமாக தனிப்படை போலீசார் விசாரணை  நடத்தி  அவர்கள் பறித்து சென்ற 38 பவுன் நகையை மீட்டனர்.

Tags :
× RELATED சாமியார்மடம் அருகே குழிக்குள் விழுந்தவர் மீட்பு