×

கன்னியாகுமரி - நெல்லை மாவட்ட மீனவர்கள் பிரச்னை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கன்னியாகுமரி, அக். 4: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. நெல்லை மாவட்ட கடல் பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மீனவர்கள் கடந்த 30ம்  தேதி கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டும்வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லாமல் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 மாவட்ட மீனவர்களும் ஈடுபட்டனர்.

 கன்னியாகுமரி விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம். மணக்குடி, கீழ மணக்குடி, ஆரோக்கியபுரம், புதுக்கிராம், வாவத்துறை, சிலுவைநகர், ஆகிய ஊர்களைச் சேர்ந்த  மீனவர்கள்  தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் தெரிந்ததும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி  பங்குபேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மீனவ அமைப்புகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்தில் குமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் லேமக்ஜெயகுமார், கன்னியாகுமரி பங்குதந்தை ஜோசப் ரொமால்ட், பங்குபேரவை துணைத்தலைவர் நாஞ்சில்மைக்கேல், விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் வானவில்சகாயம், ரெஜீஸ், செல்வம், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன், குமரி பேரூர் செயலாளர் வின்ஸ்டன், நகர ஜெ. பேரவை செயலாளர் ஆனந்த், பங்குபேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் அறிவுரையின் பேரில் வருகிற 9ம் தேதி நெல்லை சேரன்மகாதேவியில் குமரி மற்றும் நெல்லை மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பேச்சுவார்த்தையில் 2 மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 9 கிராம மீனவர்களும் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு இன்று (வெள்ளிக் கிழமை) முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்வார்கள் . ஆனால் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் பேச்சுவார்த்தை முடியும் வரை மீன்
பிடிக்க செல்லமாட்டார்கள்.


Tags : Fishermen ,Kanniyakumari - Paddy District ,strike ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...