×

சின்னமுட்டம் மீனவர்கள் தங்கு மீன்பிடி தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் ஆஸ்டின் எம்எல்ஏ கோரிக்கை

நாகர்கோவில், அக். 4: கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ ஆஸ்டின் நேற்று மாலை கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஒரு கோரிக்கை மனுகொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் தங்கு தொழில் செய்வதற்கு அனுமதி கேட்டு பல மாதங்களாக போராடி வருகின்றனர். கன்னியாகுமரி மேற்குகடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் குறிப்பாக சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் தங்கு தொழில் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதே மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மூலம் தொழில் செய்து வரும் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் மணக்குடி வரை உள்ள 9 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கு தொழில் செய்ய அனுமதி இல்லை. அருகில் உள்ள மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் உள்ள கட்டுமர மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சின்னமுட்டம் மீனவர்களுக்கு தங்கு தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள கட்டுமர மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வந்து சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட்டனர். சின்னமுட்டம் மீனவர்கள் அமைதி காத்த காரணத்தாலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தாலும் மிகப்பெரிய வன்முறை சம்பவம் தடுக்கப்பட்டது.

 இந்த செயலை கண்டித்தும், தங்கு தொழில் செய்ய அனுமதி கோரியும் சின்னமுட்டம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு இரு மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் இரு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் இரண்டு பகுதி மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையிலும், மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும், சின்னமுட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் அவர்களுக்கு தங்கு தொழில் செய்வதற்கான அனுமதி அளிக்க வேண்டும். மேலும் 4 வழிச்சாலைக்காக தோவாளை, ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுமார் 300  பேரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு முதல் தவணையாக  பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு வழங்கவேண்டிய பணம் 10 வருடகாலமாக  வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக 2013ம் ஆண்டு பணம் வழங்க அரசாணை  வெளியிடப்பட்டது. அரசாணை படி கலெக்டர் 2 முறை உத்தரவிட்டும், மத்திய  தரைவழி போக்குவரத்து நிர்வாகம் பணம் வழங்கவில்லை. இன்னும் 20 நாட்களில் பணம் வழங்கப்பட வில்லை என்றால் ஆரல்வாய்மொழியில் நிலம் கொடுத்த அனைவரையும் திரட்டி ஆரல்வாய்மொழியில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பூஜ்ஜியம் முதல் 3 கிலோ மீட்டர் வரை சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக கொண்டுவரப்படவுள்ளது. இதனால் 17 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்படும். குமரி மாவட்டம் மிகச்சிறிய மாவட்டம். சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் கொண்டுவந்தால், விவசாயம் பாதிக்கப்படும். மேலும் சிறுதொழிலான செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்படும். இதனால் பலர் வேலைவாய்ப்பு இழப்பார்கள்.
கலெக்டர் நடத்திய கருத்துகேட்டு கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கிராமசபை கூட்டத்திலும் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இதனை கைவிடவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து கிராமங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.  மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். எம்எல்ஏவுடன் தடிக்காரங்கோணம் ஊராட்சி திமுக செயலர் பிராங்கிளின், ஆரல்வாய்மொழியை சேர்ந்த சதீஷ்குமார், சுப்பையா, துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Austin MLA ,fishermen ,Collector ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...