×

காலாண்டு விடுமுறையில் என்எஸ்எஸ் முகாமில் பணியாற்றிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு

மன்னார்குடி, அக்.4: திருவாரூர் மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மேல் நிலைபள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அனைத்து அமைவுகளிலும் மத்திய அரசின் திட்டங்களான ஜல்சக்தி அபியான் (நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை), போஷான் அபியான் (ஊட்டச்சத்து திட்டம் ), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா), டிஜிட்டல் இந்தியா (பணமில்லா பரிவர்த்தனை), பிட் இந்தியா (ஆரோக்கியமான இந்தியா) ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம், பிரதமர் ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மழை நீர் சேகரிப்பு, நெகிழி இல்லா தமிழகம், சாலை பாதுகாப்பு பேரிடர் மேலாண்மை கல்வி துறையில் அண்மையில் நடைபெறும் புதிய திட்டங்கள் போன்றவை குறித்த கருத்தரங்குகள், விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.8 பள்ளி என்எஸ்எஸ் அமைவுகள் சார்பாக இலவச கால்நடை மருத்துவ முகாம்களும், 12 பள்ளி என்எஸ்எஸ் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்களும், 2 இலவச தோல் நோய் மருத்துவ முகாம்களும், 3 சித்த மருத்துவ முகாம்களும் நடைபெற்றுள்ளது.

11 கிராமங்களில் தீயணைப்பு துறையினரோடு இணைந்து தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் பாடுகள் நடைபெற்றுள்ளது. மேலும் என்.எஸ்.எஸ்ன் பொன்விழா ஆண்டினை முன்னிட்டும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டும் இந்த ஒரு வார காலத்தில் சுமார் 5,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.10 பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட அமைவுகள் சார்பாக சுமார் 70 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சீரமைப்பு நடைபெற்றுள்ளது. 28 கோயில்களில் உழவாரப்பணியும், 14 பொது இடங்களில் தூய்மைபணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 8 கிராமங்களில் நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் யோகா, ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள கூடிய சொற்பொழிவுகளும் நடைபெற்றது. காலாண்டு விடுமுறை காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களையும், ஆர்வமுடன் சமூகசேவை செய்த மாணவர்களையும் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் பாராட்டினர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : teachers ,NSS ,vacation ,camp ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்