×

ஆலங்குடி ஊராட்சியில் ஒரு வருடமாக ஒளி வீசாத உயர்கோபுரமின்விளக்கு

வலங்கைமான், அக்.4: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ள உயர்கோபுர மின் விளக்கு குருபெயர்ச்சி விழாவிற்கு முன் எரிவதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திட்கு உட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஆபத்சகாயேஸ்வரர் குருகோயில் உள்ளது. இது நவகிரகங்களில் குரு பரிகார ஸ்தலமாக உள்ளது. தேவாரப்பபாடல் பெற்ற ஸ்தலமாகும். இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலத்திலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்வர்.

கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் ஆலங்குடி குரு கோயில் வளைவு அருகே பேருந்து நிறுத்தம் பகுதியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குரு கோயிலுக்கு இரவு பகலாக வரும் பக்தர்கள் நலன் கருதி உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு பொருத்தப்பட்டு சுமார் ஆறு மாத காலம் மட்டுமே எரிந்துள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக எரியாமல் உயர் கோபுர மின்விளக்கு காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக பேருந்து நிறுத்தம் பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
வருகிற 29ம்தேதி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் குருபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உயர்கோபுர மின் விளக்கை எரியவைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Alangudi ,
× RELATED புதுக்கோட்டை, ஆலங்குடி கிராமங்களில்...