×

பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 25 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நாகை, அக்.4: திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் காந்திஜெயந்தி நாளில் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 25 வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் மற்றும் திருச்சி கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியன், இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோர் உத்தரவுபடி காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய வர்த்தக நிறுவனங்கள் குறித்து திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த திடீர் ஆய்வின்போது மொத்தம் 101 வர்த்தக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 25 வர்த்தக நிறுவனங்களில் முறையாக அறிவிப்பு செய்யாமலும், பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமலும் இயங்கியது தெரியவந்ததன்பேரில் அந்த 25 நிறுவனங்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்று அரசு விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் அல்லது இரட்டிப்பு சம்பளமோ மாற்று ஏற்பாடோ செய்யாமல் இயங்கும் நிறுவனங்கள் மீது இதேபோன்று சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : companies ,holiday ,
× RELATED ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள...