×

ராணுவ வீரரின் வீட்டுக்குள் புகுந்து நகை கொள்ளை

ஆவடி, அக்.4:  ஆவடி, புதிய ராணுவ சாலையில் பட்டபகலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீடு புகுந்து தங்க நகை, விலை உயர்ந்த வாட்சுகளை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி, புதிய ராணுவ சாலை, ஜான் வர்கீஸ் காம்பவுண்டை சேர்ந்தவர் நம்பி (76). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி இறந்து விட்டார். இதற்கிடையில், நம்பி, தனது இளைய மகன் கணேஷ் (30) என்பவருடன் வசித்து வருகிறார். இவர், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கணேஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மதியம் நம்பி வீட்டை பூட்டி விட்டு இந்தியன் வங்கியில் பணம் செலுத்த சென்றுவிட்டார். இவர், போகும் முன்பு வீட்டு சாவியை ஜன்னல் சிலாப் மீது வைத்துள்ளார். பின்னர், அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டிலிருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெளியே ஓடிவந்தார். இதனை அடுத்து, நம்பி சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார்.

அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர், அவர் திறந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள், இரண்டு விலை உயர்ந்த வெளிநாட்டு வாட்சுக்கள் ஆகியவை கொள்ளை போயிருந்தது. மேலும், நம்பி வெளியே சென்றபோது மர்ம நபர் ஜன்னல் சிலாப்பில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.

Tags : Jewel ,house ,soldier ,
× RELATED கோயிலை உடைத்து கொள்ளை