×

விவசாயிகள் கவலை பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கை கண்டித்து 100 இடங்களில் பிரசாரம், ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 4: தஞ்சை கீழராஜ வீதியில் மாவட்ட இடதுசாரி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், “ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 18,000 என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின்கீழ் வேலை நாட்களை 200ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய நெருக்கடியிலிருந்து மீள ஒருமுறை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வயதானவர்கள் மற்றும் விதவைகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய கட்சிகளின் சார்பில் வரும் 13, 14ம் தேதிகளில் மாவட்ட முழுவதும் 100 மையங்களில் பிரசாரம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது. வரும் 16ம் தேதி தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், செந்தில்குமார், மாநகர செயலாளர் குருசாமி, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ராஜன் பங்கேற்றனர்.

Tags : places ,BJP ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...