×

ஏகனாம்பேட்டை ஊராட்சியில் குடிமகன்களுக்கு அந்தப்புறமாக மாறிய பஸ் நிறுத்த நிழற்குடை

வாலாஜாபாத், அக்.2: வாலாஜபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் உள்ள பஸ் நிறுத்தம், குடிமகன்களுக்கு அந்தப்புறமாக மாறிவிட்டது என பயணிகள் புகார் கூறுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வங்கிகள், மேல்நிலைப் பள்ளி, ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம் உள்பட பல்வேறு அரசு த அலுவலகங்கள்  செயல்படுகின்றன. மேலும், ஏகனாம்பேட்டை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், ஏகனாம்பேட்டை பஸ் நிறுத்தத்துக்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு  கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும், பல்வேறு பணிகளுக்காகவும் தினமும் சென்று வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஏகனாம்பேட்டையில் கான்கிரீட் தளத்திலான பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நிழற்குடை தற்போது குடிமகன்களின் கூடாரமாகவும், அந்தப்புறமாகவும் மாறிவிட்டது. இரவு நேரங்களில்  சிலர், பாலியல் உள்பட பல்வேறு சமூக விரேத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த பஸ் நிறுத்த நிழற்குடை உள்பகுதியில் குடிமகன்கள் சிறுநீர் கழித்து விடுவதால், பயணிகள் உள்ளே அமர முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இங்கு வரும் பயணிகள் இந்த பஸ் நிழற்கூரைக்கு செல்லாமல்  அருகில் உள்ள கடைகளின் நிழலில் நிற்கின்றனர்.இதுபோன்ற சம்பவங்களில், குறிப்பாக வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். அந்த நேரத்தில் கடைகளின் அருகில் நின்றாலும், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி,  கடைக்காரர்களும் அவர்களை விரட்டுகின்றனர்.இதனால், பஸ் பயணிகளுக்கும் கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகவும் மாறிவிடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இந்த பஸ் நிறுத்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வரும் குடிமகன்களை கண்டிப்பதுடன், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Citizens ,Ekanampettai ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...