×

ரத்தினமங்கலம், வேங்கடமாங்கலம் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை

திருப்போரூர், அக்.2: ரத்தினமங்கலம், வேங்கடமாங்கலம் பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் ரத்தினமங்கலம், வேங்கட மங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு தனியார் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆங்கில வழி பள்ளிகள்  ஆகியவை உள்ளன.
மேலும் ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், கண்டிகை, கொளப்பாக்கம், நல்லம்பாக்கம், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், வெங்கப்பாக்கம் ஆகிய இடங்களில் ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகள் உள்ளன.  இதனால் இங்கு, வெளிமாநிலங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ளனர். கடந்த சில மாதங்களாக சிலர், இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து, மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, அதை சிறிய பொட்டலங்களாக வைத்து, ₹100 முதல் ₹300 வரை கல்லூரி  மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். குறிப்பாக ரத்தினமங்கலம் தனியார் கல்லூரி அருகே உள்ள சில பெட்டி கடைகளிலும், திருவள்ளுவர் நகர், மலைமேடு ஆகிய பகுதிகளிலும் கஞ்சா தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், ஆர்டர் மூலம் பைக்குகளில் நேரடியாக, சென்று சப்ளை செய்யும் அளவுக்கு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது.தாழம்பூர் காவல் நிலையம் சென்னை சோழிங்க நல்லூர் அருகே அமைந்துள்ளது. கண்டிகை, வெங்கப்பாக்கம், ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், மேலக்கோட்டையூர் ஆகிய கிராமங்கள், இந்த காவல் நிலையத்துக்கு வெகு  தூரத்தில் இருப்பதால், போலீசார் இந்த கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத செயல்களை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் கண்டிகை, ரத்தினமங்கலம் பகுதிகளில் நடக்கும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தி, இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்துகின்றனர்.

Tags : Venkatamangalam ,
× RELATED பிரசார வாகனத்தில் ஏறினால் வெயில்...