×

பிரம்ம குமாரிகள் சார்பில் முதியோர்களை போற்றும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம், அக்.2: சுங்குவார்சத்திரம் அருகே பிரம்மா குமாரிகளின் சார்பில் முதியோர்களை போற்றும் நிகழ்ச்சி நடந்தது. பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் முதியோர்களை போற்றும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூரில் உள்ள ஹேப்பி வில்லேஜில் நடந்தது. பிரம்மா குமாரிகள் இயக்க தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா தலைமை  தாங்கினார். மூத்த சகோதரி கலாவதி வரவேற்றார். ஐக்கிய நாடுகளின் சார்பில் முதியோர் தினமாக நேற்று (அக்.1) முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, முதியோர் தினத்தை மூத்த குடிமக்களை மதிக்கும் நிகழ்ச்சியாக பிரம்மா குமாரிகள் இயக்கம் கொண்டாடுகின்றது.இந்நிலையில்,  பிரம்மா குமாரிகளின் சிறப்பு பயிற்சி மையம் அமைந்துள்ள சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ள ஹேப்பி வில்லேஜ் வளாகத்தில் முதியோர்களை மகிழ்வித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது.

இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் மகெஷ் ஹெமாத்ரி கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மூத்த குடிமக்கள் சமுதாய நலம், உடல் நலம், மன நலம்,  ஆன்மிக நலம் அனைத்திலும் அக்கரை உள்ளவர்கள் என குறிப்பிட்டார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் சஞ்சய் காந்தி, முதியவர்களுக்கான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகள் பற்றி விளக்கினார்.
சகோதரி சித்ரா தியான வர்ணனையை வழங்கினார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி உதவி விரிவுரையாளர் டாக்டர் பிரபாகர், தன்னை மகிழ்ச்சியாகவும் லேசாகவும் வைத்துக்கொள்வது எப்படி என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.  சகோதரர் சிவராமகிருஷ்ணன் அனைவரையும் ஆன்மீக பயிற்சிகள் செய்வித்தார்.

Tags : Elders ,Brahma Kumaris ,
× RELATED சொற்பொழிவு நிகழ்ச்சி