×

கிராமப்புறங்களில் குடிநீருக்காக அமைத்து காட்சி பொருளான கைப்பம்புகள்

திருவள்ளூர், அக். 2: கடந்த காலங்களில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டியதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கயிற்றில் கல்லை கட்டி ஆழத்தை ஆய்வு செய்ய கலெக்டர் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கு உட்பட்டு 526 ஊராட்சிகள் உள்ளன. மேலும், ஏராளமான குக்கிராமங்களும் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இல்லாததால், குடிநீருக்காக தினமும்  மக்கள் அலைந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால், கூவம், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கிராமப்புற ஊராட்சிகளில் குடிநீர் மற்ற தேவைகளுக்காக ஆங்காங்கே ஆழ்துளை குடிநீர் கைப்பம்புகள், சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமைத்த 6 மாதத்திலேயே வறண்டு போய் பயனற்று  கிடக்கிறது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவை, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் உள்ளது. கிராமப்புற ஊராட்சிகளில் கைப்பம்புகள், சின்டெக்ஸ் தொட்டிகள் செயல்படாமல் இருப்பது குறித்து பலமுறை ஊராட்சி  ஒன்றிய நிர்வாகங்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கிராம மக்கள் சுகாதாரமற்ற குடிநீரையே அருந்தி வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ‘’ஆண்டுதோறும் கோடை காலங்களில் அரசு குடிநீர் திட்டங்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கும். இந்தாண்டு போதிய நிதி ஒதுக்கவில்லை, ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒரு சில பணிகளை  மேற்கொண்டு வருகிறோம், நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்துவிட்டதால் எவ்வளவு தான் நிதி செலவு செய்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை’’’’ என்றனர்.

கிராமப்புற மக்கள் கூறுகையில், ‘’குடிநீர் பிரச்னையை தீர்க்க கடந்த காலங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. தற்போது அந்த கிணறுகளில் தண்ணீர் இல்லை. விசாரணையில் ஆழத்தை குறைவாக தோண்டி முறைகேடு செய்தது  தெரிந்தது. சில இடங்களில் பாதிக்கு பாதி ஆழம் கூட தோண்டவில்லை. இதனால், கைப்பம்பு அமைத்தும் சில நாட்கள் கூட அதில் தண்ணீர் வரவில்லை. இதனால், இவை காட்சி பொருளாகவும், துருப்பிடித்தும் உள்ளன. மேலும் குடிநீர் பிரச்னையும் தலைதூக்கி உள்ளது.
எனவே, இனியும் கடந்த காலங்களைபோல் மோசடி நடக்காமல் இருக்க, கயிற்றில் கல்லை கட்டி ஆழத்தை சரிபார்த்த பின்பே அதிகாரிகள் கிணறு தோண்டியதற்குரிய பணத்தை கொடுக்க வேண்டும். மேலும் ஏற்கனவே தோண்டிய  கிணறுகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றனர்.

மழைநீர் சேகரிப்பிலும் அரசு பணம் வீண்
கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், நிலத்தடி நீர் மட்டம், 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதையடுத்து, நிலத்தடிநீர் உயர பயனற்ற ஆழ்துளை கிணறுகளுக்கு அருகில், மழைநீர் தேங்கும் விதமாக குழிகளை ஏற்படுத்தவும்,  அதில் சேகரமாகும் நீரை ஆழ்துளை கிணறுகள் வழியாக நிலத்திற்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் பயனற்று கிடந்த 20 சதவீத ஆழ்துளை கிணறுகளில், ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு ரூ.16 ஆயிரம் வீதம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டன.  ஆனால், இந்த கிணற்றுக்கு மழைநீர் செல்லும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை. இதனால், மழை பெய்தாலும் வீணாக செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளதோடு, அரசு பணமும் வீணாகி உள்ளது.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்