×

பெரியகுப்பத்தில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை அகற்ற பெண்கள் உண்ணாவிரதம்

திருவள்ளூர், அக். 2: திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் கீழ், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை கடந்த வாரம் திறக்கப்பட்டது. இக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர். அவரும், அப்பகுதி மக்களுடன் சென்று, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து டாஸ்மாக் கடையை அகற்ற மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் டாஸ்மாக் மதுக்கடை முன் பெண்கள் முற்றுகை போராட்டத்த்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும், மதுக்கடையை அகற்ற அரசு  முன்வரவில்லை.
இதையடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் மோகனா தலைமை வகித்தார். மாநில தலைவர்  எஸ்.வாலண்டினா, போராட்டத்தை துவக்கிவைத்து கண்டன உரையாற்றினார். இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். மகளிரின் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து, டாஸ்மாக் கடை முன் திருவள்ளூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது